1968ம் ஆண்டு மே 1ம் தேதி என் பெற்றோருக்கு முதல் குழந்தையாய் பிறந்தேன்.மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி என்ற சிறிய ஊரில் ஏழை ஆசிரியத்  தம்பதிக்கு மகளாக பிறந்தேன்.எனது தந்தை கிறிஸ்துவின் அன்பை அறியாத குடும்பத்தில் ஆறுமுகம் என்ற பெயருடன் வாழ்ந்தார்.திருமணம் அவர் வாழ்வில் திருப்புமுனை தர அவர் கிறிஸ்துவை அறிய ஆரம்பித்தார்.வேதத்தைத் தன் கரத்தில் எடுத்தார்.இரவு பகலாய் வேதத்தை வாசித்து முழு வேதத்தையும் 30 நாட்களில் வாசித்து முடித்தார்.கிறிஸ்துவின் அன்பு தொட, ஜீவனுள்ள வார்த்தைகள் அவரோடு இடைப்பட, தன்னை முழுவதும் கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தார்.கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்.அவர்களின் மூன்று பிள்ளைகளில் முதல் மகளாய் பிறந்து கிறிஸ்தவ ஒழுக்கத்திலும் கர்த்தருக்கு பயப்படும் பயத்திலும் வளர்க்கப்பட்டேன்.

எங்கள் சபையில் ஊழியம் செய்யவரும் ஊழியர்களை, அன்போடு எங்கள் இல்லத்தில் தங்க வைத்து பராமரிப்பதும் அவர்களிடமிருந்து ஆவிக்குரிய அனுபவங்களை கற்றுக் கொள்வதுமாய் என் சிறு வயதும் வாலிபமும் நகர்ந்தது.என் கல்லூரி நாட்களில் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற வாஞ்சித்து உபவாசித்து ஜெபிக்க தேவன் நடத்தினார்.எனது 18ம் வயதில் 1986ம் வருடம் ஏப்ரல் 18ம் தேதி பரிசுத்த ஆவியானவர் என் ஜெப வேளையில் என்னை நிரப்ப சில மணிநேரம் அந்நிய பாஷையில் தேவ சமூகத்தில் களிகூர கர்த்தர் கிருபை செய்தார். அன்றிலிருந்து அது தொடர் அனுபவமாய் மாறினது .

என் படிப்பு முடிந்ததும் மதுரைப் பட்டணத்தில் உள்ள  Chandler Matriculation Higher Secondary Schoolல் ஒன்பது வருடம் கணித ஆசிரியையாகப் பணியாற்ற தேவன் வாய்ப்பு தந்தார்.தேவ தீர்மானத்தின்படி 1991ல் ஏப்ரல் 17ம் தேதி திரு.விஜயகுமார் அவர்களுடன் திருமண வாழ்வை   துவங்க கர்த்தர் உதவி செய்தார்.பெனடிக்ட் சாம், டோனி சாம் என்ற இரு மகன்களுக்கு தாயானேன்.என் கணவர் வங்கியில் பணியாற்றியதால் அவர் வேலை மாறுதலின் நிமித்தம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் என்ற பகுதிக்கு குடிபெயர நேர்ந்தது.எனவே என் ஆசிரியை பணியை இராஜினாமா செய்து இல்லத்தரசியானேன்.

சத்தியமங்கலம் வந்து சேர்ந்த மூன்றாம் நாள் என் சரீரத்தில் ஒரு கட்டி தென்பட, 10 மாத கால இடைவெளியில் 4 முறை ஆபரேஷன் நடைபெற்றது. அதனால் நான் நொறுங்கி போனேன். மரண பயத்தை உணர்ந்தேன்.தேவ சமூகத்தில் என்னை ஆராய்ந்தேன்.உம்மையன்றி வேறே கதி யாருமில்லையே என்று அவர் பாதம் சரணடைந்தேன். தேவன் என்னோடு இடைபட்டார்.ஊழிய அழைப்பை உணரச்செய்தார்.

எப்படி ஊழியம் செய்யவேண்டும் என்று ஏதும் அறியாதவளாய் ஜெபித்துக்காத்திருந்தேன்.முதுநிலை பட்டதாரியான நான் இல்லத்தரசியாய் இருப்பதால் நேரத்தை வீணாக்க விரும்பாமல் இன்னுமொரு முதுநிலை பட்டம் பெற விரும்பி அஞ்சல் வழி பயிற்சி மூலம் படிப்பைத் தொடர்ந்தேன்.தேர்வு நாளின் போது தேர்வு அறைக்குள் பரிசுத்த ஆவியானவரின் வல்லமை என்னைத் தொட, ஊழியத்திற்கு நான் வேண்டும் என்ற அவரின் குரல் கேட்டு, கட்டாயத்தினிமித்தம் தேர்வு அறையில் 1/2 மணி நேரம் அமர்ந்திருந்து வெறும் பேப்பரை, கண்காணிப்பாளரிடம் கொடுத்து திரும்பினேன்.

வேதாகமக் கல்லூரியில் சேர்ந்து வேதத்தை கற்க விரும்பி முயற்சித்த போதும் தேவனின் சித்தமோ அவர் பாதத்தில் அமர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதாய் இருக்க அவ்விதமே செய்ய ஒப்புக்கொடுத்தேன்.ஒரு சில மாதங்களுக்கு பின் கி.பி.2000 அக்டோபர் மாதத்தில் திடீரென்று ஒருநாள் ஊமையாகிப்போனேன்.மருத்துவர்களிடம் சென்றபொழுது அவர்களால் என்ன பிரச்சினை என்றே கண்டறிய முடியவில்லை.ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமானது.அப்போது என் சபையின் போதகர் எனக்காக ஜெபித்த போது கண்ட தரிசனத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.அந்த தரிசனத்தில் கல்லறை திறக்கப்பட்டு, என் பெயர், பிறப்பு, இறப்பு என எழுதப்பட்டு இருந்ததையும், மரணப்படுக்கையில் தள்ளி மரிக்க வைக்க பிசாசு சவால் விட்டதையும் கூறினார்.

இதன்பின் ஓரிரு நாட்களில் என் கண் பார்வை மங்க, என் கால்களும் பெலனிழக்க செய்வதறியாமல் என் கணவரை கரம் பிடித்து ஜெபிக்க கேட்டுக்கொண்டேன்.அவர் சற்று நேரம் ஜெபித்துக் கடந்து செல்ல, நான் கர்த்தரை துதிக்கும்படி என் இருதயத்தை துதியால் நிரப்பினேன்.அப்படி நான் துதிகளை தொடர்ந்து ஏறெடுக்கும் போது ஒரு வல்லமையான கரம் என்னை தூக்கி எடுத்தது.பக்கத்து அறையின் உள்ளே என்னையுமறியாமல் ஓடினேன்.முழங்கால் படியிட்டேன்.தேவ வல்லமை என்னை அளவில்லாமல் நிறைத்தது.

என் அறைக்கு வெளியே தூதர் இசைக்கருவி மீட்டு இனிமையான பாடல் பாட தேவ பிரசன்னம் வீட்டை நிறைத்தது.என் அறைக்கு வெளியே நின்றிருந்த என் கணவரும் பிள்ளைகளும் தேவதூதர்களின் இசையை கேட்டனர்.அந்நேரமே கர்த்தர் எனக்கு விடுதலை தந்த நேரமானது.முற்றிலும் சுகம் பெற்று வெளியே வந்தேன்.கர்த்தருக்கே மகிமை.

பிசாசு கல்லறை ஆயத்தம்பண்ணி என்னை முடிக்கத் திட்டமிட்டான். தேவனோ அவர் தீர்மானத்தின்படி ஊழியம் ஆரம்பமாகும் நாளாய் மாற்றினார்.கர்த்தர் என் வாழ்வில் செய்த மாபெரும் நன்மையை சாட்சியாய் அறிவிக்க ஊழியம் ஆரம்பமானது. கர்த்தருடைய நடத்துதலின்படி ” கிறிஸ்து இயேசுவின் கிருபை ” என்ற பெயரில் ஊழியத்தை பதிவு செய்யவும் இன்று வரை கிறிஸ்துவுக்காய் ஓடவும் தேவன் கிருபை செய்கிறார்.

பெண்கள் மாநாடுகளிலும், சபை உபவாசக் கூடுகைகள், வாலிபர் கூடுகை, கன்வென்ஷன் கூட்டங்கள் என தேவன் பயன்படுத்தி வருகிறார்.பரிசுத்த ஆவியானவர் என்னை கொண்டு 35 புத்தகங்களை எழுதினார்.மாதந்தோறும் “கிருபை மலர்” என்ற மாத இதழை வெளியிட தேவன் நடத்துகிறார்.

ஆசிரியப் பணிக்கான அரசு உத்தரவு வந்தபோதும், அதை நிராகரித்து தேவனுக்காய் ஓட கர்த்தரே கரம் பிடித்து நடத்துகிறதை அனுபவிக்கிறேன்.என் இருதய வால்வு ஒன்று சரிவர இயங்காமல் சுருங்கி விட்ட மருத்துவ அறிக்கையையும் ஒதுக்கி வைத்துவிட்டு அதை மேற்கொள்ளவும் தேவனுக்காய் ஓடவும் கர்த்தர் கிருபை செய்கிறார்.

சிறை நண்பர் சிலரின் குடும்பங்களை போஷிக்கும் ஊழியத்தையும் தேவன் கூடுதலாய் தர அதையும் அவர் பெலத்தோடு நடத்தி வருகிறோம்.

அப்போஸ்தலர் 1:8ல் உள்ள வாக்குத்தத்ததைக் கொடுத்து ஊழியத்தை ஆரம்பிக்கச் செய்த கர்த்தர் அதை என் வாழ்வில் ஒவ்வொரு நாளும் நிறைவேற்றி வருகிறதைக் கண்டு என் தேவனை ஸ்தோத்திரித்து மகிமைப்படுத்துகிறேன்.

தற்பொழுது தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூரை மையமாக வைத்து இந்த கனமான ஊழியத்தை பொறுப்பேற்று நடத்த தேவன் தரும் கிருபைகளுக்காய் அவரை ஸ்தோத்திரிக்கிறேன்.கர்த்தருக்கே எல்லா துதி,  கனம், மகிமையை ஏறெடுக்கிறேன்.கர்த்தரின் நாமம் தொடர்ந்து மகிமைப்படுவதாக!

Upcoming Events